Temple History

அகிலாண்டகோடி பிரஹ்மாண்டநாயகியான ஸ்ரீ ஆதிபராசக்தி உலகெங்கும் வியாபித்து, பல அவதாரங்கள் எடுத்து, மக்களின் குறைகளையும், இயற்கையால் ஏற்படும் பேராபத்துகளையும், உலக அழிவையும் தடுத்து நிறுத்தி, மக்களையும், உயிரினங்களையும் காப்பாற்றிட பல புண்ணிய ஷேத்திரங்களில் அருள்பாலிக்கின்றாள். அவ்வகையில் இச்சக்தியானவள் சோழ மண்டலத்தில் வளமான காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள பூலோகவைகுண்டமாம் ஸ்ரீரங்கம் புண்ணிய ஷேத்திரத்திற்குத் தெற்கே குழுமணிஸ்தலத்தில் – அக்ரஹாரத்தில் ஸ்ஜயமங்கள ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவி என்ற திருநாமத்தில் எழுந்தருளி,

பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு ஜாதி, மத, இன வேறுபாடில்லாமல், தன்னை சரணடைந்த அனைத்து பக்தர்களுக்கும், நல்வழிகாட்டி, கேட்ட வரங்களைப் பூர்த்தி செய்து வருகிறாள்.

லோகமாதா அருள்மிகு ஜயமங்கள ப்ரத்யங்கிரா தேவியின் பக்தர்கள் தினம் மனமுருக ஒருமுறை இந்த ஸ்தலத்திற்கு வந்து, தேவியை வணங்கி, வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் பெற்று நீடுழி வாழலாம்.

இவளுக்குரிய மந்திரங்கள், ஸ்லோகங்கள் அதர்வண வேதத்தில் உள்ளன.

இவ்வளவு சிறப்புமிக்க அன்னை, மனிதர்களுக்கு ஏற்படும் அனைத்துக் குறைகளையும் தீர்த்து, தன்னைச் சரண் அடைந்த பக்தர்களை மூதறிஞர் ஸ்ரீ ராஜாஜி பாடினாரே,

‘குறையொன்றுமில்லை …’ என்று, அதே குறையேதுமில்லாமல் வாழ அருள்புரிந்து வருகிறாள்.

குழுமணி வந்து, அங்கே கோலோச்சும் ஸ்ரீ ஜயமங்கள பிரத்யங்கிரா தேவியின் தரிசித்து வணங்கினால், வாழ்வில் ஜெயம் உண்டாகும்.
இல்லத்தில் மங்களம் உண்டாகும்.
இல்லத்தில் மங்களம் பொங்கும்.
ஜெயமும், மங்களமும் கிடைத்தபின் வேறு என்ன வேண்டும் ?

அம்பாளின் அருள்மழை :

குழுமணி அக்ரஹாரத்தில் பழமையான திருக்கோவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் விளங்கும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில். இப் பெருமாளுக்கு வைகானச ஆகமப்படி, கைங்கர்யம் செய்து வந்தவர் ஸ்ரீ முத்துகிருஷ்ண பட்டாச்சாரியார். இவர் சிறந்த ஜோதிடர் அவரோடு கல்லூரிப் படிப்பை முடித்த அவரது குமாரர் ஸ்ரீ B .M கல்யாணராம பட்டாச்சாரியார் தன் தகப்பனாருக்கு உதவியாய் இருந்து பிறகு நியமம் தவறாமல் ஸ்ரீ வரதராஜபெருமாளுக்குக் கைங்கர்யம் செய்து வருகிறார். இவர் சிறந்த ஹனுமத் உபாசகர். 1991-ஆம் ஆண்டு, ஒரு நாள் ஸ்ரீ குருஜி அவர்கள், தியானத்தில் இருந்த போது, ஓர் அபூர்வ நிகழ்வு நடந்தது. அது புரட்டாசி மாதம் சக்தி கொலுவிலிருக்கும் நவராத்திரி சமயம்!.

ஸ்ரீ குருஜியின் எதிரே பேரொளி. பேரொளியினூடே நான்கு திருக்கரங்கள். அவற்றில் முறையே சூலம், கபாலம், டமருகம், பாசம் காணப்படுகின்றன. சாந்த முகத்துடன் அம்பாள் ஜெகஜோதியாகக் காட்சி தருகிறாள்.


“மகனே! அல்லலுறும் மக்களுக்கு சேவை செய்வதே, உன் பணி!. என்னை நன்கு பார். மக்களுக்கு உதவிட, நான் நிற்கும் கோலத்தில் ஆலயம் அமைத்து, பூஜித்து வா. நான், ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அம்சம். வைகானச ஆகமப்படி ஆராதித்து வா. உன்னிடம் பக்தர்கள் கூறும் குறைகள் எனக்குத் தெரியும்.

உடனே, அவர்களின் குறைகளை, கஷ்டங்களைத் தாய் உள்ளத்தோடு, நான் தீர்த்து வைப்பேன். என் நாமம் ஜயமங்கள ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி’ என்று கூறி மறைந்தாள்! இது கனவா?… நினைவா? .. ஸ்ரீ குருஜிக்குப் புரியவில்லை! எதிரே ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஸ்ரீ வரதராஜ பெருமாளும், ஸ்ரீ ஆஞ்சநேயரும் ஆசி வழங்குவது போல, ஓர் அபூர்வ நிகழ்வு! வியக்கிறார் ஸ்ரீ குருஜி. உடனே தியானம் கலைந்து எழுகிறார். தன் முன் தோன்றிய அம்பாளை, ஒரு தாளில் வரைபடமாக வரைகிறார்.


அச்சு அசலாக அதே திரு உருவம்!
அம்பாளின் ஆக்ஞையை சிரமேற்கொண்டு சுவாமிமலை ஸ்தபதியிடம் தன்னிடமுள்ள படத்தைக் காட்டி, அம்பாளை நின்ற கோலத்தில் வடிவமைத்து பிரதிஷ்டை செய்கிறார். அந்த அம்பாள் ஜயமங்கள ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி. அவளுக்கு 12 ஆண்டுகள் அபிஷேகம், ஆராதானை செய்து, ப்ரத்யங்கிரா ஹோமம் செய்து, நாடிவரும் பக்தர்களின் வேண்டுதலை, அம்பாள் ஆசியால் தீர்த்தார்.

பிறகு, 2003ஆம் ஆண்டு, அவினாசி அருகே உள்ள திருமுருகன் பூண்டி ஸ்தபதியிடம் சொல்லி, ஐந்தரை அடி உயரத்தில் சாலி கிராமத்தில் அம்பாளை நிறுவி, அம்பாளின் அருளால் நற்பலன் பெற்ற பக்தர்கள் ஒத்துழைப்போடு, 02.03.2007 வியாழன் அன்று ஸ்ரீ வைகானச ஆகம விதிப்படி ஜயமங்கள ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி பிரதிஷ்டை செய்யப்பட்டு, மஹா சம்ரோஷனம் நடைபெற்றது. அன்று முதல், ஸ்ரீ வைகானச ஆகமப்படி, தினசரி பூஜைகள் நடந்து வருகிறது. தினமும் மக்கள் வந்து, பிரார்த்தனை செய்து பயன்பெற்று வருகின்றனர்.

திருக்கோவிலின் அமைப்பு :

முதலில் தனி சன்னதியில் ஸ்ரீ விஷ்வக்சேனர் (ஸ்ரீ விநாயகர்). அவர் அருகில் பலி பீடம், அடுத்து ஸிம்ம வாகனம்.
கருவறையில், “வாருங்கள், என்னை சரணடைந்த, உங்கள் குறைகளைத் தீர்த்து வைக்க ஓடி வருகிறேன்’ என்று அழைப்பது போல நிற்கும் நிலையில் ஜயமங்கள ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவியின் திருஉருவம்.
நான்கு திருக்கரங்கள், கரங்களில் சூலம், கபாலம், டமருகம், பாசம் முதலியன ஒளிவீசிக் கொண்டிருக்கின்றன. சாந்தமான அமைதி தவழும் முகம். ஸ்ரீ அம்பாளின் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் குடைபிடிப்பது போல அமைந்துள்ளது. ஸ்ரீரங்கநாத பெருமாளுக்குப் பஞ்சணையாய் அமைந்த நாகம் ஸ்ரீ அம்பாளுக்குக் குடையாய் அரவணைத்துள்ளது. நவக்கிரஹங்களில் இராகு, கேதுவினால் பக்தர்களுக்கு ஏற்படும் தோஷங்களைப் போக்கிட சிறந்த பரிஹாரஸ்தலம் இது என்பதை ஐந்து தலை நாகம் சொல்லாமல் சொல்கிறது.

ஸ்ரீ அம்பாளின் வலது புறமும், இடதுபுறமும் ஏழு தீபங்கள் பிரகாசிக்கின்றன. கீழே இரண்டு குத்துவிளக்குகள் ஒளி வீசுகின்றன. அவற்றில் ஸ்ரீ விஷ்ணுவின் ஆயுதங்களான சங்கு சக்கரம். இந்த 16 தீபங்களும் அம்பாளை சரணடைவோர் 16 பேறுகளும் அடைவர் என்று சத்யவாக்காக கூறுவது போல் உள்ளது. அம்பாளின் அருகே சிம்ம வாகனம்.

பிரதட்சணம் வரும்போது, கீழ்புறம் ஸ்ரீ மஹாலட்சுமி, தென்புறம் ஸ்ரீ ஜயமங்களா, மேற்கு புறம் ஸ்ரீ வாக்தேவி – இவர்கள் அம்பாளின் ஆக்ஞைப்படி, செல்வம், மங்களம், நல்வாக்கையும் பக்தர்களுக்கு வாரி வழங்குகின்றனர்.
ஸ்ரீ அம்பாளின் அருகே பிரத்யங்கிரஸ், ஆங்கிரஸ் முனிவர்களின் திருஉருவங்கள். தனி சன்னதியில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகக் கோலம், என்றும் சிரஞ்சீவியாய் வேண்டுவோர்க்கு வேண்டுவன வழங்கும் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர், குபேர ஆஞ்சநேயர். தினமும் 2 வேளை பூஜைகள் உண்டு. நவராத்திரி திருவிழா புரட்டாசி மாதம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை, அமாவாசை மற்றும் தமிழ் மாதப்பிறப்பு அன்று காலை அபிஷேகம் நடைபெறும். அமாவாசை மாலை 6 மணி அளவில், நிகும்பலா யாகம் நடக்கிறது. யாகத்தில் போடப்படும் மிளகாயின் காரம் கமறல் வரவே வராது. வெற்றிலைப் பிரார்த்தனை யாகத்தின் சிறப்பாகும்.


ஸ்ரீ குருஜியிடம் ஆசி பெற – செவ்வாய், வெள்ளி, ஞாயிறு உகந்த நாட்கள். முதல் நாளே 9047755556 , 9362855556 என்ற எண்ணில் பதிவு செய்து கொள்வது அவசியம். கோவிலுக்குச் செல்ல, திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அயிலாப்பேட்டை, கோப்பு, குறிச்சி ஆகிய பேருந்தில் ஏறி குழுமணியை அடையலாம். சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து குழுமணிக்கும் பேருந்து உண்டு.
குறையெலாம் தீர்ந்திட குழுமணிக்கு வாருங்கள்
Email::bmkraman@gmail.com
+91 9047755556
+91 9362855556
Find Us
Jayamangala Sri Maha Prathyangira Devi Petam, Kulumani Aghragaram, Srirangam Taluk. Trichy DT – 639103
Opening Hours

Morning

9.00 am to 1 noon

Evening

6.00 pm to 8.00 pm